Monday 23 July 2012

Kavidhai Pirandhadhu

கவிதை பிறந்தது
                            -சாரதா ராஜாமணி  


கல கல வென்றே பாய்ந்தோடும்
கங்கை யமுனை காவேரி - போல்
பலப் பல மொழிகள் பேசுகின்ற
பலவித மதம் சேர் மாந்தரெல்லாம்
நிலவும் நமது பாரதம்
நீடதன் பெருமை உயர்த்திடுவோம்!

நதிகள் பலவே ஆனாலும்
நண்ணிக் கடலினை அடைதல் போல்
சாதி சமயங்கள் கிடக்கட்டும்
சண்டை வேண்டாம் நமக்குள்ளே!
பதிகள் பலவினும் வசிக்கின்ற
பாரத மக்கள் நாம் ஒருங்கிணைவோம் !

சீருடை அணியும் சிறுவர்களும்
சிறுபை சுமக்கும் சிறுமியரும்
காரிடை வலம்வரும் காளையரும்
கருத்தைக் கவரும் கன்னியரும் - இப்
பாரிடை பெற்றோர் துயருணர்ந்து
பயன்மிகு கல்வியை பயின்றிடுவோம்!

காணர்க்கரிய பாவையரைக்
கண்வைத்தவர் பின் சுற்றுவதும்
வீணர்க்குரிய புகைபிடிக்கும்
விலங்கினும் கீழாம் பழக்கமதும்,
மாணவர்க்கழகென எண்ணாமல்
மாதிரி மாணவநெனத் திகழ்வோம்!

பஞ்சசீலக் கொள்கைதனைப்
பஞ்சாய்க் காற்றில் பறக்கவிட்டுக் - கல்
நெஞ்சர்கள் நமதேல்லை உட்புகுந்தால்
நெஞ்சம் கனலென சீறிஎழ
வஞ்சகர் கொட்டம் அடக்கிடவே
வலிந்து சென்று உயிர்கொடுப்போம்!

தெய்வத்தின் பாதம் சரணடைவோம்;
தெருள் நீங்கத் தாய்நாடு காத்திடுவோம்,
தாய்மையை வணங்கி வாழ்த்திடுவோம்;
தன்னலம் கருதாமல் தழைத்திடுவோம் - என
வாய்மையின் வழியும் திறந்ததங்கே
வெல்ல ஓர் கவிதையும் பிறந்ததிங்கே!

(நான் காணும் ஓர் கனவினிலே
நைச்சியம் பேசும் நரிகளில்லை;
வானுயரப் புகழ்ந்து பாடும்
வஞ்சகப் புலிகளும் இல்லை; என
என் கனவு விரிந்தது அங்கே -
ஒரு கவிதை பிறந்தது இங்கே!)

                                                        - சாரதா ராஜாமணி

No comments:

Post a Comment