பெருவாழ்வு காண்பது எப்போது?
- சாரதா ராஜாமணி
குடிசையோரம் புழுக்கள்
ஓடும் சாக்கடை ஓடுது - தெருவில்
குழாய்த் தண்ணி அதனருகே
சொகுசாய் கொட்டுது
கிழிஞ்ச சட்டைப் பையனங்கே எச்சில் துப்புறான்
கிழவியவள் தானுமங்கே
குடிநீர் பிடிக்கிறாள்!
எருமைமாடு சாணம் போட
சகதி நிறையுது - தெருவில்
சிறுவனவன் மலம் கழிக்க
நோயும் பரவுது!
கண்ட இடத்தில் கொட்டுவதால்
குப்பை நிறையுது
உண்ட இடத்தில் படுத்தபடி
தெருநாய் உறங்குது!
பள்ளி செல்லா சிறுவனவன்
கோலி ஆடுறான் - அங்கே
படிப்பு அறியாச் சிறுமி
அவள் சுள்ளி பொறுக்குறாள்!
வாழ தெரியாத் தலைவனவன்
குடியில் ஆடுறான்
வாழக்கைப்பட்ட குடிசைப்பொண்ணு
அவனை சாடுறாள்!
கோலி ஆடும் சிறுவனவன்
படிப்பதெப்போது?
ஜாலியாக திரியும் தலைவன்
திருந்துவதெப்போது?
குடிசைவீடும் மாளிகையாய்
மாறுவதெப்போது?
குடிமக்களும் பெருவாழ்வு காண்பதெப்போது?